தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றியது. குறிப்பாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 98 சதவீத இடங்களை திமுக பெற்றது. ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தலிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் ஒன்றிய தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுகவைச் சேர்ந்த இரண்டு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர் தரப்பினர் தங்கள் ஆதரவாளர்களுக்குப் பதவியைப் பெறுவதற்காக இந்த மோதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.