Skip to main content

மாணவர்களிடையே மோதல்; தந்தைக்கு அடி உதை; அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Conflict between college students sivaganga

 

சிவகங்கை மாவட்டம் ராஜா துரைசிங்கம் பகுதியில், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

ஆவரங்காட்டை சேர்ந்த மாணவர்களுக்கும் பூவந்தி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து, இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை அழைத்துக் கண்டித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவு மாணவர்கள் கல்லூரிக்கு வெளியில் வந்து மீண்டும் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக பூவந்தியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் தனது மகன் பொன்சக்தி உட்பட  ஏழு பேருடன் சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன்பிறகு, வீட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு ஹோட்டலில் பூவந்தி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆவரங்காட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட மாணவர்கள் அவர்கள் வந்த கார் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். மேலும், அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் புகுந்த மாணவர்கள் அங்கிருந்தவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

 

இந்தத் தாக்குதலில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மகன் பொன்சக்தி உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை நகரப் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் காவல்நிலையத்திற்கு அருகில் நடந்ததால் வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிவாள், கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்