பறை உள்ளிட்ட தோல் இசைக்கருவிகளுடன் அரசு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியை பேருந்து நடத்துநர் பாதியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ளது ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற மாணவி முதலாம் ஆண்டு பி.பி.ஏ படித்து வருகிறார். இவருக்கு தோல் இசைக்கருவிகளான பறை உள்ளிட்ட கருவிகளை வாசிப்பதில் அதிக நாட்டம். இதனால் கல்லூரி ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் சிவகங்கையில் இருந்து பறை உள்ளிட்ட தோல் இசைக்கருவிகளுடன் வந்த மாணவி கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த நிலையில் மீண்டும் சொந்த ஊரான சிவகங்கை செல்வதற்காக நெல்லை பேருந்து நிலையம் வந்த ரஞ்சிதா இசைக்கருவிகளுடன் ஒரு பேருந்தில் ஏறி உள்ளார். சக மாணவர்களும் அவரை வழி அனுப்ப வந்தனர். பேருந்து ஏறியவுடன் நண்பர்கள் சென்றுவிட்டனர். இசைக்கருவிகளை பேருந்தில் வைத்துக் கொள்ளலாமா என ஓட்டுநரிடமும் நடத்துநரிடமும் ரஞ்சிதா கேட்க, அவர்கள் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பேருந்து புறப்படும் நேரத்தில் டிக்கெட் கொடுக்க வந்த நடத்துநர் இசைக்கருவிகளை எல்லாம் கீழே இறக்கும்படி ரஞ்சிதாவிடம் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக மாணவி ரஞ்சிதா சக மாணவர்களை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் மாணவி ரஞ்சிதாவை வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சிதா, ''கல்லூரி கலைவிழாவுக்காக பறை உள்ளிட்ட கருவிகளை கொண்டு வந்தேன். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு போவதற்காக திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறினேன். ஏறும்போது கேட்டு தான் ஏறினேன். ஏற்றிக்கொள்ளலாம் என்று சொல்லவும் தான் ஏறினேன். ஆனால் கடைசியில் இறங்கச் சொல்லிட்டாங்க. நான் இதற்கும் டிக்கெட் எடுத்துகிறேன் என்று சொன்னேன். ஆனால், ‘நீ எறங்கு. இது எல்லாத்தையும் கீழே இறக்குறியா, இல்ல தூக்கி எறியவா’ என சொன்னதோடு என்னையும் அனாவசியமாகப் பேசினார்கள். ‘பேசஞ்சுரக்கு தான் பஸ்ஸில் சீட்டு. கண்ட கருமத்துக்கு எல்லாம் கிடையாது. நீ இறக்குறியா. இல்ல, தூர வீசவா என்று பேசினார்கள்’'' என்றார்.
மாணவிக்கு நிகழ்ந்த இந்த அவலம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஆட்சியர் இப்படி நடந்து கொண்ட பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு மாணவி ரஞ்சிதா இசைக்கருவிகளுடன் மீண்டும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.