வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில், பட்டியலினத்தவருக்கு எதிராகப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி, காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, மே 31-ஆம் தேதி வரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜூன் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் தனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதியும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஜூன் 1-ஆம் தேதி சரணடையும் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் மனுவை அன்றைய தினமே பரிசீலிக்க வேண்டும் என, அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார். இதன்படி, ஆர்.எஸ்.பாரதி, 1-ஆம் தேதி காலை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் சரணடைந்தார். பின்னர், அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர் வாதிட்டனர்.
அரசுத் தரப்பில் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதங்களை முன் வைத்தார். ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என புகார்தாரரான கல்யாண சுந்தரம், ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான ஒரு நபர் ஜாமீனிலும் ஆர்.எஸ்.பாரதியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.