சென்னை, கலைவாணர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தோழர் இரா. நல்லகண்ணு 100 நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், “நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப்பெரிது என்று அய்யன் திருவள்ளுவர் எழுதிய குரல் ஐயா நல்லக்கண்ணுவிற்கு உரித்தாகும். ஆரவாரம் இல்லாத அன்பு பண்பு இதெல்லாம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மலையை விட பெரியவர்கள் என்று அன்றைக்கு அய்யன் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆசையே இல்லாத ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ முடியுமா, நல்லக்கண்ணு அவர்கள் வாழ்ந்திருக்கிறாரே.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் குடும்பத்தோடு அவரது இல்லத்திற்குச் செல்வோம். சுனாமி வந்த காலகட்டத்தில் அவர் திருமுல்லைவாயிலில் இருந்தார். அப்பொழுது சுனாமியைக் கண்டு பதறிவிட்டார். உயிருக்காக ஒரு மனிதன் பதறுவது என்பது எவ்வளவு பெரிய விசயம். எங்களை பொடா வழக்கில் கைது செய்தபோது கலைஞர் தலைமையில் மிகப்பெரிய கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் நல்லக்கண்ணு ஐயா பேசியதை மட்டும் வாசித்து விட்டு நான் விடைபெறுகிறேன். ஜனநாயகத்தில் நான்கு தூண்கள் இருக்கிறது. அதில் நான்காவது தூண் பத்திரிக்கை. தமிழகத்தில் நான்கு தூண்களுமே அச்சுறுத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு வகையில் சேதப்படுத்தப்படுகிறது. ராணி மேரி கல்லூரிக்கு 9 ஆண்டுகள் கழித்து ஒன்பது லட்சம் கொடுக்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் இந்த ஆட்சியில் 9 அது என்ன ஒன்பது?. ஒன்னும் புரியல. ராணி மேரி கல்லூரி வழக்கில் இன்னும் மூன்று மாதத்தில் தீர்ப்பு வரும் என்று கூறினார்கள். ஆறு மாதம் ஆகிவிட்டது இன்னும் தீர்ப்பு வரவில்லை. 9 மாதத்தில் தான் வரும் என்று நினைக்கிறேன்.
லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்ததாக நக்கீரன் ஆசிரியரைக் கைது செய்து இருக்கிறார்கள். நக்கீரன் நிருபர்களை எல்லாம் தேடுகிறார்கள் என்ற போது எந்த கிறுக்கனாவது லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை வைத்திருப்பானா?. அறிவு வேண்டாமா?. அரசாங்கத்துக்குக் கிறுக்கு புடிச்சி இருக்கணும். யாரோ ஒரு தினகர் புத்தகத்தை வைத்து வழக்குத் தொடுக்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு புதிரென்று மோகன்தாஸ் புத்தகம் எழுதினார். வைகுன்றம் என்பவர் நான் சந்தித்த சவால் என்றும், லட்சுமி நாராயணன் கடமைகள் காயங்கள் என்ற புத்தகத்தையும் எழுதினார்கள். இந்த புத்தகங்களை எல்லாம் படித்து வழக்குத் தொடுக்க வேண்டும் என்றால் யார் யாரோ உள்ளே செல்வார்கள்.
பொடா கொடுமையைத் தடுக்கவில்லை என்றால் நாடே குட்டிச் சுவர் ஆகிவிடும். யாரும் அரசியலே பேச முடியது. இன்றைக்கு நக்கீரன் ஆசிரியருக்கு நடந்தது நாளைக்கு அனைவருக்கும் நடக்கும். தலைவர்கள் கையை தூக்கி விட்டு இறக்கி விடக்கூடாது. தொடர்ந்து கையை உயர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அனைத்து நகரத்திலும் இது போன்று கூட்டத்தை நடத்த வேண்டும். என்று பொடா வழக்கில் கைதான் எங்களுக்காக ஐயா நல்லகண்ணு பேசிய உரை இது. நல்லகண்ணு அய்யாவை பொறுத்தவரை ரஞ்சிதம்மாள் இறந்த பிறகு பொழுதனைக்கும் அம்மா உடனே அமர்ந்திருந்தார் இது ஒரு வகையான காதல்” எனப் பேசினார்.