தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்கள் அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது புகார் எழுந்துள்ளது.
இத்துறையில் பயிலும் 5 மாணவிகள் ஒரு கடிதம் மூலம் அவர் மீதான பாலியல் தொந்தரவு குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகார் மனுவின் மீதான உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கல்லூரி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அதில், மாணவிகள் கூறிய பாலியல் புகார்கள் உண்மைதான் எனவும், பேராசிரியர் பால் சந்திரமோகனுக்கு ஆதரவாகப் பேராசிரியர் நளினி என்பவர் இருந்துள்ளார் எனவும் உறுதி செய்யப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் தற்போது பேராசிரியர் பால் சந்திரமோகனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி சுற்றுவட்டாரத்தில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் பிஷப் ஹீபர் கல்லூரி மீது தற்போது ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த புகார் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தநிலையில் ஏடிசி வனிதா தலைமையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இன்று இரவுக்குள் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.