அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடியும், முன்னாள் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்ட நீதிமன்றங்களில் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அன்பழகன் மீதான குற்றப்பத்திரிகை 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருந்தது. சி.விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை 216 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து இனி அடுத்தடுத்த அமைச்சர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.