மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் இழப்பீடு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் நிவர், புரவி புயலால், அனைத்துப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. சரியான கணக்கெடுப்பு நடைபெறவில்லை. காப்பீடு செய்யாதவர்களுக்கு, பயிர்க் காப்பீடு தொகை வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சுவர் இடிந்து, வீட்டிற்குப் பணம் தருவது என்பது தவறான நடவடிக்கையாகும், வெள்ளம் சூழ்ந்த அனைத்து வீடுகளுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு, தலா ரூ.5 ஆயிரமும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் ஏக்கருக்கு, நெற்பயிருக்கு ரூ.30 ஆயிரமும், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய வேண்டிய கடைசி தேதியை டிச.15-ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பரவனாற்றை ஒழுங்குபடுத்தி, அருவாமூக்கு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தூர்ந்துபோய் உள்ள வீராணம் ஏரியை, தூர்வார வேண்டும். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் கதவணை கட்டப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகிறது. ஷட்டர்கள் பழுதாகிவிட்டது. எனவே புதிதாக ஷட்டர் அமைக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை உடனே வழங்க வேண்டும். காலதாமதமாக வரும் மத்தியக்குழு பரிந்துரை செய்யும் வரை, மத்திய அரசு நித வழங்கக் காத்திருக்கக் கூடாது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை, எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு உரிய சலுகை கிடைக்கும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நிர்வாகிகள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.