திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் காவல் நிலையம் சென்னை – பெங்களுரூ தேசிய நான்கு வழிசாலையில் உள்ளது. எப்போதும் பரபரப்பாக உள்ள அந்தப் பகுதியில் நிறைய வர்த்தகக் கடைகள் உள்ளன.
மார்ச் 2 ஆம் தேதி இரவு, திடீரென காவல் நிலையத்துக்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயந்துபோயுள்ளனர். இதனால் பலரும் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். இதுபற்றிய தகவல் உடனடியாக ஆம்பூர் டி.எஸ்.பி, திருப்பத்தூர் எஸ்.பிக்கு கிடைத்துள்ளது. காவல் நிலையத்தில் நடந்தது என்னவென விசாரிக்க டி.எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி நடந்த விசாரணையில், ஷிஃப்ட் பணி முடிந்து பணி ஏற்றுக்கொள்ள வந்த உதவி ஆய்வாளர் பழனியின், 5 சுற்று கொண்ட 9 எம்.எம். கைத்துப்பாக்கியைச் சரிபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது காவல்நிலைய ரைட்டர் சேதுகரன் தவறுதலாக ட்ரிகரை அழுத்தியதால் துப்பாக்கி வெடித்ததாகவும், அதிலிருந்து வெளியேறிய தோட்டா, காவல்நிலையத்தின் பக்கவாட்டுச் சுவரில் பட்டதாகவும் தெரியவந்தது. அப்போது காவல்நிலையத்தில் பொதுமக்கள் அதிகம் இல்லாமல் காவலர்கள் மட்டும் சிலர் இருந்தனர் எனத் தெரிவித்துள்ளனர். இதுப்பற்றிய அறிக்கை எஸ்.பி விஜயகுமாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.