"விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள் என நாடு முழுக்க வாழும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும், கரோனா கால நிவாரணமாக மத்திய அரசு 7500/-ரூபாயும், மாநில அரசு 5000/- ரூபாயும் உடனடியாக வழங்கக்கோரி இன்று தமிழகம் முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரு கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஒவ்வொரு ஊர்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள் அதில்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் 100 நாட்கள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் மேலும் இத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும்.
பொது விநியோக திட்டத்தை முறைப்படுத்துவதோடு சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீண்டும் இயக்க நிபந்தனையின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும். அதேபோல் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை காலம் தாழ்த்தாமல் அனுப்பி வைக்க வேண்டும்.." என கோஷமிட்டனர் ஈரோடு மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை அலுவலகமான "ஜீவா இல்லத்தின்" முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, தலைமை தாங்கினார் அதே போல் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் என தமிழகம் முழுக்க இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.