கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுத்தூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை ஒன்று சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படுகிறது. அந்த வேலையை நிறுத்திவிட்டு அதே ஊரில் அங்கன்வாடி, நூலகம் இருக்கும் பகுதியில் நியாயவிலைக் கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆதிதிராவிட மக்களுக்கு மகளிர் சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும். ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர் கழிவறை வசதி ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
இந்த ஊரில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் தெரு மின் விளக்கு, குடிநீர், சுகாதார வளாகம் கட்டவும், காலை, மாலை இரண்டு வேலைகளிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். பெருமாள் கோவில் தெருவில் உள்ள சாக்கடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். மயானத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். ஆதிதிராவிடர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.சிவப்பிரகாஷ், என்.ஆடு பெரியசாமி, ஆர். எழில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர். சுப்பிரமணியன், மங்களூர் ஒன்றிய செயலாளர் எம்.நிதி உலகநாதன், நல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் கே.ராஜ்குமார், நகர செயலாளர் கே.செல்வராசு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.