உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாகத் தமிழக அரசால் கடந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டும்(2024) தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில். பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசு விநியோகம், கரும்புகளைக் கொள்முதல் செய்ய மாவட்டம், வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் துறை இணை இயக்குநர், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை அடங்கிய குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களைப் பெறக் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தினை கண்காணிக்கத் தொடர்பு அலுவலர்களை நியமித்து பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.