Skip to main content

‘வள்ளலார் 200’ முப்பெரும் விழா; சிதம்பரத்தில் கோலாகலம்!

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

vallalar festival celebrated in chidambaram!

 

சிதம்பரத்தில் வள்ளலார்-200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர்.

 

சிதம்பரத்தில் வள்ளலார் இவ்வுலகிற்கு வருகையுற்று 200-வது ஆண்டுத் தொடக்கம், அதேபோல் அவர் தருமசாலை தொடங்கி 156-வது ஆண்டுத் தொடக்கம் மற்றும் அவர் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் காலை அகல் ஜோதி ஏற்றப்பட்டு அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. பின்னர், சிதம்பரம் கீழ வீதியில் இருந்து கோலாட்டம், கும்மி உள்ளிட்ட ஆடல் பாடல்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் பேரணியாக விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமைத் தாங்கி வள்ளலாரைப் பற்றி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்து அறநிலையத்துறை கடலூர் மண்டல இணை ஆணையர்(பொறுப்பு) ஜோதி வரவேற்றுப் பேசினார். இதில் சன்மார்க்க நெறியாளர்கள் மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டனர். வள்ளலார் குறித்து நடைபெற்ற பேச்சு, ஓவிய, கட்டுரை, இசை, ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து வள்ளலார் குறித்து சீனிவாசன், அன்னபூரணி ஆகியோரால் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. முன்னதாக வடலூர், சிதம்பரத்தில் அன்னதானம் செய்துவரும் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் பேசுகையில், “காக்கை 4 மணிக்கு எழுந்து தினந்தோறும் குளித்து கிடைக்கும் உணவை மற்ற காகத்துடன் பகிர்ந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறது. பறவையினங்கள், விலங்கினங்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறது. அதேபோல் மனிதர்களும் வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, அவரின் போதனைகளை உலகிற்கு எடுத்துக் கூறி, எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில், கிடைக்கும் உணவுகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறி வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.

 

விழா காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கடலூர் மண்டல செயற்பொறியாளர் கலையரசு, உதவி கோட்ட பொறியாளர் அசோகன் மற்றும் பல்வேறு கோவில்களில் செயல் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்