Skip to main content

7 ஆயிரம் டன் நெல் மூட்டை மாயமான விவகாரம்; கலெக்டர் புது விளக்கம்!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

7 thousand tons of paddy bundle is a mysterious affair; Collector New Description!

 

தர்மபுரி மாவட்டத்தில், டி.என்.சி.எஸ்.சி. கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமான புகாரில், அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை முழுமையாக அனுப்பிய பிறகே, நெல் மூட்டைகள் மாயமானதா இல்லையா என்பது தெரிய வரும் என்று புது விளக்கம் அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

 

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டி.என்.சி.எஸ்.சி.) திறந்தவெளி கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில மாதங்களில் 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதாகவும், அவற்றில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாகவும் புகார்கள் கிளம்பின. 

 

இதுகுறித்து துறை சார்ந்த கண்காணிப்புக்குழு, முதல்கட்ட விசாரணை நடத்தியது. அதேநேரம், தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் 80 நெல் அரவை ஆலைகளில் டி.என்.சி.எஸ்.சி. தரப்பில் இருந்து அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் விவரம் சரியாக உள்ளதா என்றும் விசாரணை நடத்தினர். 

 

கண்காணிப்புக் குழுவினர் நடத்திய விசாரணையில், நெல் மூட்டைகள் மாயமாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சாந்தி, நெல் மூட்டைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பு இல்லை என்றதோடு, இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சாந்தி, மே 31ம் தேதி டி.என்.சி.எஸ்.சி. திறந்தவெளி கிடங்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: “டி.என்.சி.எஸ்.சி. கிடங்கில் இருந்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மாயமானதாக வந்த புகாரின்பேரில், தணிக்கை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தரக்கட்டுப்பாட்டுத்துறையின் மூத்த அதிகாரிகள், கண்காணிப்புக் குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். 

 

முதல்கட்ட விசாரணையில், டெல்டா மாவட்டங்களில் இருந்து 22,273 மெட்ரிக் டன் நெல் வரப்பெற்றது. இதில் 71,174 டன் நெல், அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15,098 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு உள்ளது. 130 ஸ்டாக்குகளாக அவற்றை அடுக்கி வைத்திருக்கிறோம். 

 

ஒரு ஸ்டாக்கில் சரியாக அடுக்கி வைத்தால் 2,952 மூட்டைகள்தான் வைக்க முடியும். ஆனால் கிடங்கு ஊழியர்கள் சில ஸ்டாக்குகளில் 3 ஆயிரம் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். அதனால் மொத்தமுள்ள 130 ஸ்டாக்குகளில் 122 ஸ்டாக்குகளில் முழுமையாகவும், 8 ஸ்டாக்குகளில் பாதியாகவும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. 

 

இவற்றில் சில மூட்டைகள் சரிந்துள்ளன. சரிந்த மூட்டைகளை முதல்கட்டமாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி உள்ளோம். இதற்காக 100 தொழிலாளர்கள் வந்துள்ளனர். 120 லாரிகள் வந்துள்ளன. அரவை ஆலைகளுக்கு முழுவதும் அனுப்பி வைத்த பிறகுதான் நெல் மூட்டைகள் மாயமாகி உள்ளனவா இல்லையா என்பது தெரிய வரும். எங்களுடைய முதல்கட்ட விசாரணையில், நெல் மூட்டைகள் எதுவும் மாயமாகவில்லை எனத் தெரியவந்துள்ளது” என்றார் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.

 

இந்த ஆய்வின்போது டி.என்.சி.எஸ்.சி. மண்டல மேலாளர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்