கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டும், மாவட்ட காவல்துறையினர் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20-06-24) அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஜி.பி, மதுவிலக்குத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுபோன்று மீண்டும் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையம், கள்ளச்சாராய மரணம் சம்பவம் பற்றி முழுமையாக விசாரித்து பரிந்துரைகளை 3 மாதங்களில் வழங்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனால் வழங்கியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.