நள்ளிரவில் கைகளில் துப்பாக்கிகளுடன் ஸ்ரீங்கம் கோவிலை சுற்றி வளைத்த கமாண்டோக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் சாமி திருக்கோவிலில் நள்ளிரவு 1 மணியளவில் தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிரவாத தடுப்பு பயிற்சியின் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகைப் பயிற்சியின் போது தேசிய பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் கோவிலைச் சுற்றி வந்து பாதுகாப்பு பணி குறித்த பயிற்சியில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலின் போது பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது, தீவிரவாதிகளை எப்படி சுட்டுப்பிடிப்பது என்பது குறித்தான ஒத்திகைகளும் நடத்தப்பட்டது. மேலும் கோவில் வரைபடங்களை வைத்து பாதுகாப்பு பணிகளின் போது செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களைக் குறித்தும் விளக்கினர். தேசிய பாதுகாப்பு படையினர் வரைபடங்களை வைத்து திட்டங்களை விளக்கியபோது மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா மற்றும் காவல்துறையினர் பலரும் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள பூக்கள் மார்க்கெட் உலகப்புகழ் பெற்றதால் அங்கு 24 மணி நேரமும் வியாபாரிகள் இருந்த வண்ணம் இருப்பார்கள். நள்ளிரவில் கமாண்டோக்கள் கைகளில் துப்பாக்கிகளுடன் கோவிலைச் சுற்றி வளைத்ததால், என்ன நடக்கிறது எனத் தெரியாத மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் ஸ்ரீரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.