சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், விருதுநகர் மாவத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டு, தொடர் வேலை நிறுத்தம் செய்து, பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி, விருதுநகரில் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டமெல்லாம் நடத்தினார்கள். ‘பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்!’ என்பதே அன்றைய முழக்கமாக இருந்தது.
இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. “பழைய முறையில் பட்டாசு உற்பத்தி நடந்தால் சிவகாசி முன்னேற்றம் அடைய முடியாது.” என்று தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மதுரையில் நடத்திய 2-வது மாநில மாநாட்டில், தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசனே கூறியிருக்கிறார்.
மேலும் அவர், “பசுமைப் பட்டாசு உற்பத்தியால் உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து ஆர்டர்கள் அதிக அளவில் கிடைக்கும். உலகமே நமது பசுமைப் பட்டாசு உற்பத்தியைத் திரும்பிப் பார்க்கும். பட்டாசுகளின் விற்பனையும் அதிகரிக்கும். சிவகாசி பட்டாசுகளால் மக்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்பதை உணர்த்த வேண்டும். பசுமைப் பட்டாசு என்பது காலத்தின் கட்டாயம்.” என்று சிவகாசியின் குரலாக ஒலித்திருக்கிறார். பட்டாசுத் தொழிலும் தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட்டால் சரிதான்!