சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணித்த ரயிலில் மதுபோதையில் கல்லூரி மாணவர்கள் சிலர் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை பயன்படுத்தி அதிக அளவில் சத்ததுடன் பாடல்களை கேட்டுக்கொண்டு ரகளை செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் மாணவர்கள் சிலர் மதுபோதையில் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை பயன்படுத்தி அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விட்டு ரகளை செய்வதாக ரயில் பயணிகள் ரயில்வே போலீசாருக்கு புகார் அளித்திருந்தனர். அந்த ரயில் திண்டிவனம் வந்தவுடன் ரயிலில் ஏறிய போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அவர்களிடமிருந்து 16 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய ரயில்வே போலீசார், 'ரயில் பயணம் போன்ற பொது இடங்களில் ஹெட் போன் போட்டு தான் பாடல் கேட்க வேண்டும். அப்படி எல்லாம் சட்டம் இருக்கிறதே என்று உங்களுக்கு தெரியாதா? தெரியுமா தெரியாதா?. சரி உங்க அக்கா தங்கச்சி ரயிலில் போனால் இப்படித்தான் பண்ணுவீங்களா.. நீங்க நிறைய இடத்தில் ஜாலியா இருங்க. பாண்டிச்சேரி போறேன்னு சொல்றீங்க பாண்டிச்சேரியில் போய் ஜாலியா இருங்க. அங்க போய் ஜாலியா இருங்க 'என அறிவுறுத்தல் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் இறுதியாக ஜாமீனில் மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.