
மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய உறுப்பு கல்லூரிகள் அனைத்திற்கும் கடந்த 21ஆம் தேதி இறுதிப் பருவத்தேர்வு தொடங்கியிருக்கும் நிலையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத விடாததால் கண்டன கோஷங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் எழுதலாம் என அறிவிப்பை மத்திய பல்கலைகழகம் அறிவித்திருந்தது. அதேபோல் இந்த தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்று அனுமதியையும் மத்திய பல்கலைக்கழகம் வழங்கி இருந்தது. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அதேபோல் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தேர்வுக்கு செல்லும் பொழுது புத்தகங்களை எடுத்து சென்று தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுத சென்ற நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியின் தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத புத்தகத்தை எடுத்து சென்ற பொழுது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதக்கூடாது என கண்டிக்கப்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வு மையத்தின் எதிர்புறத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.