கொலைகாரக் கரோனாவின் ஆக்டோபஸ் கரங்கள் வர்க்க பேதமில்லாமல் ஏழை எளிய மக்களையும் எத்தகைய கொடூரத்திற்கு ஆளாகியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பதமே.
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் காளிராஜ். லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். திருச்சி அருகே வரும் போது, காளிராஜிக்கு நெஞ்சு வலி ஏற்ப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்சில் அவரது மனைவி உறவினர் ஒருவர் உதவியுடன் சொந்த ஊருக்குக் கொண்டு வந்தார். கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில், இரவு 10 மணியளவில் ஆம்புலன்சை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே ஆம்புலன்சை அனுமதிப்போம் என்று கூறினர். சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல கலெக்டர் அனுமதியின்றி அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த காளிராஜின் மனைவி கதறி அழுதார். இதனிடையே தகவலறிந்து நேற்று காலை 6 மணியளவில் கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் லாரி டிரைவர் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் விசாரித்த போது, காளிராஜ் நெஞ்சுவலியால் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அனுமதியளித்ததின் பேரில், 11 மணிநேரத்துக்கு பின் காளிராஜின் உடலை கோவில்பட்டியிலேயே அடக்கம் செய்தனர். இறந்த தன் கணவரை தனது சொந்த கிராமத்திற்குக் கூட கொண்டு செல்வதற்கு மனைவிக்கு அனுமதியில்லை என்பதே பரிதாபம்.