புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஊரில் நிகழ்ச்சி நடந்தாலும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, செல்லும் வழியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குள் சென்று ஆய்வுகள் செய்வதை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், இன்று(3.1.2024) புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கந்தர்வகோட்டை பகுதிக்குச் சென்றார். பின்பு, கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறைக்குச் சென்று வகுப்பறையில் இருந்த ஆசிரியர் மணிகண்டனிடம் என்ன பாடம் நடக்கிறது என்று கேட்ட ஆட்சியர், மாணவர்களிடமும் கேள்விகள் கேட்டார். ஆய்வகங்களை பயன்படுத்திதான் பாடங்கள் நடத்தப்படுவதாக மாணவர்கள் சொன்னதும், நல்லது இது போன்ற ஆசிரியர்கள் முயற்சியால் தான் மாணவர்கள் உயர்ந்த இடங்களுக்கு வர முடியும். இது போன்ற ஆசிரியர்களை பின்பற்றுங்கள் என்று மாணவர்களிடம் கூறினார். தொடர்ந்து வகுப்புகளில் நன்றாக பாடம் நடத்துங்கள் என்று ஆசிரியரிடம் தெரிவித்தார்.
அப்போது சில வகுப்புகளில் மாணவர் வருகைப் பதிவுகளைப் பார்த்த மாவட்ட ஆட்சியர், ஏன் நிறைய மாணவர்கள் பல நாட்களாக வராமல் உள்ளனர். உடனே என்ன காரணம் என்பதைப் பாருங்கள் என்று தலைமை ஆசிரியரிடம் கூறினார்.
தொடர்ந்து, “எஸ்எம்சி தலைவி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சேர்மன் ஆகியோரை அழைத்து இந்தப் பள்ளியில் 3 முதல் 15 நாட்கள் வரை நிறைய மாணவர்கள் வராமல் உள்ளனர். இப்படி விடமுடியாது. இவர்கள் ஏன் வரவில்லை என்பதை உடனே தெரிஞ்சுக்கனும். அதனால பிடிஏ, எஸ்.எம்.சி கூட்டத்தை நடத்தி பெற்றோர்களிடம் பேசுங்க. எல்லா மாணவர்களும் பள்ளிக்கு வர நடவடிக்கை எடுங்க. பிடிஏ, எஸ்எம்சி கூட்டம் போடுவாங்க அவங்க கூட நீங்களும் வந்து பெற்றோர்களிடம் பேசினால் மாணவர்களை அழைத்து வந்துவிடலாம் அதனால நீங்களும் பேசுங்க” என்று சேர்மனிடம் கூறினார்.
தொடர்ந்து கழிவறைகள், சுற்றுச்சுவர் உள்ளதா என்று கேட்டுவிட்டு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியுள்ளதை கண்டுபிடித்து, அவர்களிடம் காரணம் கேட்டு பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.