தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்” என்றார். இருப்பினும் இது குறித்து சர்ச்சை இன்னும் அடங்கவில்லை..
இந்த நிலையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். தென்காசியில் என் மண், என் மக்கள் பேரணியில் பேசிய அவர், “திமுகவைப் பொறுத்தவரைச் சனாதனம் என்பது பார்ப்பனியம், பிராமணர்களின் ஆதிக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சனாதனத்தின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் முதலும் முடிவும் இல்லாமல் எல்லா காலமும் இருக்கக் கூடிய தர்மம், சனாதன தர்மம். இது எப்போது பிறந்தது என்று யாருக்கும் தெரியாது; எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. இன்னும் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் இருக்கும்.
சனாதனத்தின் அடிப்படை கோட்பாடு, நம் மதத்தில் மட்டும்தான் மனிதனைக் கடவுள் என்று சொல்கின்றோம். மரத்திற்கும் செடிக்கும் ஆபத்து ஏற்பட்டால் கூட அதற்கு வலிக்கும் என்று சொல்கிறோம்; அதுதான் சனாதன தர்மம். அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் விலங்குகளுக்கும் அறிவு, உணர்வு இருக்கிறது என்று சொல்கிறது. அதனால்தான் வீட்டில் இருக்கும் நாயைக் கூட தன் குழந்தைபோல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சனாதன தர்மம் கூறுகிறது. இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. பாகுபாடு கிடையாது. அனைவரும் சமம்தான். மேல் சாதி, கீழ் சாதி என்று சனாதன தர்மம் உருவாக்கவில்லை; மனிதர்கள் தான் உருவாக்கினார்கள். அதனையே மனிதர்கள் சரி செய்கின்றார்கள். சகஜாநந்தா, ராமானுஜர், ஆதி சங்கராச்சாரியார் உள்ளிட்டோர் அனைவரும் சமம் என்று சொல்கிறார்கள். சனாதன தர்மத்தில் அவ்வப்போது பிரச்சனை வரும் போதெல்லாம், அதனைச் சரிசெய்யும் மகான்களும் சனாதன தர்மத்திலிருந்துதான் வருகிறார்கள். மனிதனைக் கடவுளாகப் பார்க்கும் மதம் இருக்கிறது என்றால் அது இந்து மதம்; சனாதன தர்மம்” என்று தெரிவித்துள்ளார்.