மதுரை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் மர்மநபர்கள் புகுந்ததாக புகார் எழுந்ததுள்ளது. இதனால் அங்கு பல கட்சி தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் தள்ளுமுள்ளு ஏறட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி ஆவணங்களை பெண் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றதாக மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனனுக்கு வந்த தகவலின் பேரில் அவர் மருத்துவக் கல்லூரி அலுவலகம் சென்றார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு கலால்வரி தாசில்தாரான சம்பூர்ணம் என்ற பெண் அதிகாரி தலைமையில் 4 பேர் புகுந்து உள் சென்று மாலை 5.30 மணிக்கு சில ஆவணங்களுடன் வெளியேவந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மருத்துவ கல்லுரியில் கூடி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைக்கான சிசிடிவி காட்சிகள் வேண்டும் என சு.வெங்கடேசன் தரப்பில் கேட்கப்பட அதிராகரிகள் தரப்பு சிசிடிவி கேமரா செயல்படவில்லை என கூறியுள்ளதாக தகவல் கசிய இது வெளியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு திரண்ட கட்சிக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், மதுரையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ளது. இங்கு மதியம் ஒரு பெண் அதிகாரி ஒருவர் மாவட்ட ஆட்சியரின் எந்தவித அதிகாரப்பூர்வமான அனுமதியும் இல்லாமல் அவர்களாக உள்ளே வந்து மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளே உள்ள ஆவணங்களை எடுத்து வெளியே உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்.
அவர்கள் இரண்டு மணி நேரம் உள்ளே இருந்துள்ளனர். காவலர்கள் அவர்களை பார்த்து பிடித்து வைத்திருந்தார்கள். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து இவர் அதிகாரிதான் என்று சொல்லி விட்டு அவர்களை அழைத்து சென்று விட்டனர்.
ஆனால் எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் இவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார்கள். எப்படி ஒரு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள இடத்தில் ஆட்சியரின் அதிகாரபூர்வமான அனுமதி இல்லாமல் எப்படி உள்ளே வந்தார்கள், உள்ளே வந்து அவர்கள் என்ன செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியவேண்டும். எங்களுக்கு சிசிடிவி காட்சி வேண்டும். எப்போது வந்தார்கள் எப்போது சென்றார்கள் என தெரிய வேண்டும். ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வந்து நேரில் பதில் சொல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என கூறினார்.