Skip to main content

திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!



திருச்சியில் கடந்த சில நாட்களாகவே வாகன சோதனை மிக மிக கடுமையாக்கப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு என்று 3 நேரங்களிலும் தொடர் சோதனையில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பிரச்சனையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதற்கு இடையில் போலீசுக்கும் ரயிவே ஆபிஸர் ஒருவருக்கும், மீடியா வீடியோ கிராபருக்கும், போலீசுக்கும் என்று நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் திருச்சியில் பத்திரிகையாளர்கள் ஒரு தரப்பினர் போலிஸ் நடத்தும் நிகழ்ச்சியை புறக்கணிக்கவும் ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தான் திருச்சியில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே, ஹெல்மெட் சோதனை தொடரும் என மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் கடந்த நவ.20-ம் தேதி பொறுப்பேற்றார். அதன்பின்னர், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நோக்கத்துடன் காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாத 36 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.36 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு உள்ளபோதிலும், கட்டாய ஹெல்மெட் முறையை அமல்படுத்துவதில் காவல் துறையினரும் தீவிரமாக உள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் திருச்சியிலுள்ள வாகன ஓட்டிகளில் சுமார் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதனால், விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாக இருந்தது.

இதை தவிர்க்க, வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டேன். அதற்கு பின் காவல்துறையினர் பல இடங்களில் வாகனத் தணிக்கை நடத்தி, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யத் தொடங்கினர். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் 60 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியத் தொடங்கிவிட்டனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான பணிகள் தொடரும். கடந்த 20 நாட்களில் மாநகரில் விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்படுவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வாகன சோதனையின்போது, ஹெல்மெட் அணியாதவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. வாகனத்தின் சாவி, செல்போனை பறிக்கக் கூடாது. நடுரோட்டுக்குச் சென்று விரட்டி, விரட்டி பிடிக்கக்கூடாது எனவும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி அதுபோன்ற பிரச்சினைகள் நிகழாது. மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இதற்கு இடையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்னிசை குழுவினரை சரக்கு ஏற்றும் மினிடோர் வண்டியில் ஏற்றி சென்றது சர்ச்சைகுரிய விசயமாக மாறியது.

- ஜெ.டி.ஆர் 

சார்ந்த செய்திகள்