
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பது பேசும் பொருளாகியுள்ளது. இது குறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர், உக்ரைனில் உள்ள தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். தற்போது உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில் சாய் நிகேஷ் அந்நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளார். இதனையறிந்த இந்திய உளவுத்துறையினர், கோவையில் உள்ள அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அவரது அறை முழுவதும் ராணுவ வீரர்களின் புகைப்படம் இருப்பது தெரிய வந்தது. மேலும், உயரம் குறைவாக இருந்ததால், இந்திய ராணுவத்தில் சேர முடியாமல் போனதாக, அவரது பெற்றோர் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற சாய் நிகேஷ் போர் சூழலைப் பயன்படுத்தி, அந்நாட்டு ராணுவத்தில் இணைந்து ராணுவ வீரராக தனது கனவை அடைந்துள்ளார்.
இதனையடுத்து, மகன் குறித்து அனைத்து தகவல்களையும் வழங்கிய பெற்றோர், தமது மகனை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.