கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக மூன்று நாட்களுக்குப் பிறகு தனிப்படை போலீசார் கடந்த 14.11.2021 அன்று இரவு பெங்களூருவில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு, அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பின்னர் சிறையிலடைத்தனர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை கோவை போக்சோ நீதிமன்றம் விசாரித்தது. இந்தநிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் மீரா ஜாக்சன் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.