கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான ராஜேஸ்வரியின் இடதுகால் மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
கடந்த 12ஆம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே நிலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் ராஜேஸ்வரியின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், இடதுகால் எலும்புகள் மற்றும் இரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இடதுகாலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் செயற்கையாக பொருத்தப்பட்ட இரத்த நாளங்கள் பலன் அளிக்கவில்லை.
மேலும் காலில் சீழ் பிடித்து அழுக துவங்கியதால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நேற்றிரவு மருத்துவர்கள் இடதுகாலை அகற்றினர். வலதுகாலிலும் எலும்பு முறிவு உள்ளதால் உடல் நிலை தேறியதும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து மயக்க நிலையில் உள்ள ராஜேஸ்வரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்