
கோவை கணபதி அருகே வேதம்பாள் நகரில் ஹிதயதுல்லா முஸ்லிம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளி வாசல் மீது கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த அகில், பாண்டி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னதாக ஒரு வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்து, ஹிதயதுல்லா முஸ்லிம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் குண்டு வீசியதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிவாசல் மீது வீசப்பட்டது பெட்ரோல் குண்டு என்பதை தடயவியல் துறையினர் தங்கள் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.