கோவை: பயிற்சி பெற்று வந்த ஹரியானா சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை
கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் பகுதியில் உள்ள செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற வீரர் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை, படிக்க முடியவில்லை என கடிதம் எழுதி வைத்துக் விட்டு அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் பகுதியில் உள்ளது சி.ஆர்.பி.எப். எனும் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் பயிற்சி மையம். இங்கு நாடு முழுவதிலும் இருந்து சி.ஆர்.பி.எப். படைப்பிரிவில் பல்வேறு பணிகளுக்கு தேர்தெடுக்கப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சி, போர்க்கால பயிற்சி, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் பயிற்சிக்காக அனைத்து வீர்ர்களுக்கு மைதானத்திற்கு வந்தபோது கடந்த ஒரு ஆண்டாக 32 பெட்டாலியன் படைப்பிரிவில் எஸ்.ஐ. ரேங்கில் பயிற்சி மேற்கொண்டு வந்த ஹரியான மாநிலம் ரீவாரி மாவட்ட்த்தைச் சேர்ந்த சந்தீப் என்ற வீரர் வரவில்லை. இதையடுத்து பயிற்சி மையத்தில் பல்வேறு இடங்களில் தேடியபோது சமையல் அறையின் அருகில் இருந்த ஒரு மரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது அறையில் சோதனையிட்டபோது அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் தன்னால் இங்கு வழங்கப்படும் பயிற்சியை செய்யமுடியவில்லை எனவும், படிப்பது மனதில் ஏறுவதில்லை எனவும், பார்வை குறைபாடு உள்ளதாகவும், மிகவும் கடினமாக இருப்பதால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சந்தீப்பின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருகின்ற 26 ஆம் தேதி பயிற்சி முடித்து பணியில் சேர இருந்த நிலையில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருள்குமார்