கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே இருக்கும் ஒண்டிப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் சுதாகரன். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சசிகலா. ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
பள்ளி இறுதித் தேர்வு முடிந்து மாணவர்கள் தற்போது விடுமுறையில் உள்ள நிலையில், 12 வயது சிறுமியான இவர்களது மகள் வீட்டின் வெளியே கடந்த 17ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தார். அவரது தாய் வீட்டினுள் வேலையாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து தாய் சசிகலா வெளியே வந்து பார்த்தபோது சிறுமி அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த சசிகலா, அவரது கணவர் சுதாகரனுக்கு தகவல் கொடுத்தார். இந்தத் தகவலை கேட்டு பதறியபடி வீட்டிற்கு வந்த சுதாகரன் அருகே இருந்த வீடுகளிலும், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலும் மகளைத் தேடினார். ஆனால், எங்கு தேடியும் மகள் கிடைக்காததால், அவர் உடனடியாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மாயமானது சிறுமி என்பதால் கோவை மாநகர கிழக்கு மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் மாற்றப்பட்டது. இந்தப் புகாரை உடனடியாக வழக்காகப் பதிவு செய்த கோவை மாநகர கிழக்கு மகளிர் காவல்நிலையக் காவல்துறை சிறுமியின் வீட்டின் அருகே இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் சிறுமி வீட்டைச் சுற்றி இருந்த மற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், சிறுமி காணாமல் போன தகவல், அவரது புகைப்படம், முகவரி ஆகியவற்றுடன் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து சிறுமியைக் கண்டுபிடிக்க கோவை காவல்துறை ஆறு தனிப்படைகளை அமைத்து விசாரணையை இன்னும் தீவிரமாக்கியது. அதேசமயம், சிறுமி ஒண்டிப்புதூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு தனியார் பேருந்தில் ஏறும் சி.சி.டி.வி. காட்சியை போலீஸார் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பேருந்தின் நடத்துநரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த நடத்துநர், ‘சிறுமி ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தார். ஆனால், எங்கு இறங்கினார் எனத் தெரியவில்லை’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமி பயணித்த வழித்தடத்தில் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து அந்து சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.