18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன என பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக பாஜகவிற்கு ஆதரவான அமைப்பு சார்பில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த சுதந்திரகண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கோவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க எனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு வந்திருந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயரும், எனது மனைவியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில் எங்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதேபோல எங்களது பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் வாக்களர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கப்படுவதற்கு முன்பு உரிய விசாராணை நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்றே மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வலா மற்றும் நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் இன்று (30.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி வாதிடுகையில், “கடந்த ஜனவரி மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டது. மனுதாரர் தொகுதியில் வசித்து வரவில்லை. மாறாக அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டே மனுதாரரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், “ஜனவரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?. படிவம் 6 மற்றும் 7 ஐ ஏன் பயன்படுத்தவில்லை. வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.