கரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் உயிரிழப்புகள் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தில் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகர போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் உட்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மூன்று பேர் போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்கள். இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்குப் பணியாற்றிய காவலர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டது.
மேலும், தற்காலிகமாக போத்தனூர் காவல் நிலையம் வேறு இடத்தில் சில நாட்களுக்கு இயங்கும் என மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண் தெரிவித்தார். கரொனோ தொற்று உள்ள 6 பேரில் ஒருவர் குனியமுத்தூர் காவல்நிலையம், ஒருவர் ஆயுதப்படை, ஒருவர் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவில் உள்ளனர். மற்றவர்கள் போத்தனூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதனிடையே குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால்.. குனியமுத்தூர் காவல் நிலையத்தையும் தற்காலிகமாக மூட மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது அந்க்த காவல் நிலையம் குனியமுத்தூர் குமரன் மஹாலில் செயல்பட்டு வருகிறது.