Skip to main content

கோவை கார் வெடிப்பு; ஜமேசா முபீன் உடலை அடக்கம் செய்ய மறுப்பு; பாதுகாப்புப் பணியில் துணை ராணுவம்!

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

Coimbatore car fire accident CRPF In protection

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். அதற்குள் காரில் இருந்த ஒருவர் முற்றிலுமாக தீயில் எரிந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

முதலில் இந்த விபத்தில் இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவராத நிலையில், 23ம் தேதி இரவே காவல்துறையினர் உயிரிழந்த நபர் குறித்து கண்டறிந்தனர். அதில், உயிரிழந்தவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்று தெரியவந்தது. உக்கடம் ஜி.எம் நகர், கோட்டைப்புதூர் பகுதியைச் சேர்ந்த இவரிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது.

 

Coimbatore car fire accident CRPF In protection

 

இவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் அதில் சில ரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும்  கைப்பற்றியுள்ளனர்.

 

ஜமேசா முபீன் ஓட்டிவந்த காரை வாங்கிய நபருக்கும் காரைக் கடைசியாக வைத்திருந்த நபருக்கும் இடையில் 9 பேர் இருந்திருக்கிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவர் மீது வழக்குகள் எதுவும் கிடையாது என்றும், ஆனால் என்.ஐ.ஏ விசாரணை செய்தவர்களிடம் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Coimbatore car fire accident CRPF In protection

 

இந்நிலையில் ஜமேசா முபீன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சி.சி.டி.வி.யில் ஜமேசா முபீனுடன் சில நபர்கள் இணைந்து ஜமேசா முபீன் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை எடுத்து செல்வது தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளன. இது சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினமான சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் நடந்துள்ளது. இந்நிலையில், ஜமேசா முபீனுடன் இருந்த உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம், அவர்கள் எடுத்து சென்ற பொருள் என்ன? எதற்காக எடுத்து சென்றனர்? இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டுள்ளனரா எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஜமேசா முபீன் உடல் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவியிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உடலை அடக்கம் செய்ய ஜமாத்துகள் முன்வரவில்லை. கோவையின் அனைத்து ஜமாத்துகளும் அமைதியை விரும்புவதால், சமூக விரோத செயலுக்கு திட்டுமிட்டது போல் முபீனின் மரணம் இருப்பதால் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் கோவை பூ மார்கெட் ஜமாத்தில் மனிதாபிமான அடிப்படையில் முபீனின் உடலை அடக்கம் செய்தனர். 

 

Coimbatore car fire accident CRPF In protection

 

இதனையடுத்து கோவை மாநகரம் முழுக்க போலீஸ் மற்றும் அதிவிரைவுப் படையான துணை ராணுவத்தின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.  கோவை முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் 2,000க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். பாதுகாப்புப் பணியில் வஜ்ரா வாகனமும் பயன்படுத்தப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்