கடந்த ஆண்டு நவம்பர் 16ந் தேதி கஜா புயலின் கடுமையான தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. அதிலும் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், சவுக்கு உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்தது. பல நூறு ஆண்டுகளாக கிராமங்களின் அடையாளமாக நின்ற ஆலமரங்களும் அடியோடு சாய்ந்தது.
இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கஜா புயலின் தாக்கத்தால் சாய்ந்த தென்னை உள்ளிட்ட மரங்களை இன்னும் அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதுடன் முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதில் விவசாயிகளை வாழவைத்துக் கொண்டிருந்த தென்னை உள்ளிட்ட மரங்களின் அழிவு விவசாயிகளை நிலைகுழைய செய்துவிட்டது.
இந்த நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சில விவசாயிகள் தங்கள் தோட்டங்களை சுத்தம் செய்து மறு நடவுகளுக்கு தயாராகி வருகின்றனர். அதனால் தென்னங்கன்றுகள், மா, பலா போன்ற கன்றுகளை வெளியூர்களில் இருந்து வாங்கி வருகின்றனர். புயல் பாதிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் ரூ. 50 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்ட தென்னங்கன்றுகள் தற்போது தேவைகள் அதிகமாக இருப்பதால் வெளியூர்களில் இருந்து கீரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள கன்று வியாபாரிகள் ஒரு தென்னங்கன்று ரூ. 800 முதல் ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். அதே போல மா போன்ற கன்றுகளும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ. 800 வாங்கப்படும் தென்னங்கன்றுகள் பதியத்திலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வளர்க்கப்படுவதால் தோட்டங்களில் நடவு செய்த 3 ஆண்டுகளில் காய்க்க தொடங்கும் என்கின்றனர் வியாபாரிகள். ஆதனால் விவசாயிகள் விலையை பார்க்காமல் கடன் வாங்கி அதிக விலை கொடுத்து தென்னங்கன்றுகளை வாங்கி நடவு செய்து வருகின்றனர். இதே போல பல்வேறு வகையான தென்னங்கன்றுகளுடன் வியாபாரிகள் கிராமங்களில் வந்து செல்கின்றனர்.
இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது.. தென்னை, பலா உள்ளிட்ட அனைத்து கன்றுகளும் விவசாயிகளே சொந்தமாக உற்பத்தி செய்து நடவு செய்தால் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் தற்போது அவசரம் கருதி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதனால் 3 வருடத்தில் காய்க்கும் என்று விசாயாபாரிகள் சொல்வதை விவசாயிகள் நம்பி தென்னங்கன்றுகள் வாங்கி நடவு செய்கிறோம். அவர்கள் சொன்னபடியே காய்த்தால் நல்லது. மேலும் தென்னங்கன்றுகளை நடவு செய்யும் நிலையில் அந்த கன்றுகளை வளர்க்க தொடர்ந்து தடையில்லா மின்சாரம் கிடைத்தால் தான் வளர்க்க முடியும் என்றனர்.