கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் அருகிலுள்ள பாசிகுளம், கணபதி குறிச்சி, முருகன்குடி, கிளிமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சங்கத்தில் விவசாய கடன் நகைக்கடன் பெற்றும் விவசாய அணிக்காக நகை கடன் பெற்றும் பயனடைந்து வந்தனர்.
அரசு அறிவித்த விவசாய நகை கடன் தள்ளுபடி சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பு இந்த சங்கத்திற்கு வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த சுரேஷ், செயலாளர் மணிமாறன், எழுத்தர் சுப்பிரமணியன், மேற்பார்வையாளர் ராஜசேகர், மற்றும் 20 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இப்பகுதியில் ஏற்கனவே இறந்துபோன விவசாயிகளின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதை ஆய்வு செய்த அதிகாரிகள், அதை அறிக்கையாக தயார் செய்து கடலூர் மாவட்ட வணிகவியல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். அதன் பேரில் சம்பந்தப்பட்ட துறை போலீசார் மேற்படி 20 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைவர் சுரேஷ், செயலாளர் மணிமாறன், எழுத்தர் சுப்பிரமணியன், மேற்பார்வையாளர் ராஜசேகர் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட மீதமுள்ள 16 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இறந்துபோன விவசாயிகள் பெயரில் மோசடி செய்தது குறித்து வணிகவியல் போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையில் ,இறந்தவர்கள் பெயரில் கடன் பெற்றால் அந்த கடனை எப்படியும் அரசாங்கம் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரித்து சங்கத்திலிருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. மேற்படி நால்வரையும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.