Skip to main content

கூட்டுறவு தேர்தல் –ஆளும் கட்சியினருக்காக வெற்றி பட்டியலை மாற்றும் அதிகாரிகள்!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
list


தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இவைகளில் மோசடியான நியமனங்கள் அதிகளவில் அதிகாரிகளின் பெரும் ஆதரவோடு ஆளும்கட்சி செய்வது அப்பட்டமாக வெளியாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட தலைநகரில் உள்ள மின்தொழிலாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுக 2 இடத்திலும், திமுக 4 இடத்திலும், கம்யூனிஸ்ட்கள் 3 இடத்தில், மற்றவர்கள் 4 இடத்தில் என வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த வெற்றி பட்டியலை வெளியிடாமல் கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் ஒருநாள் இரவு முழுவதும் போக்குகாட்டினர். மின்தொழிலாளர்கள் தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் செய்ய அதன்பின்பே வெற்றி பெற்றவர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டது.

போளுர் அருகேயுள்ள மண்டகொளத்தூரில் உள்ள கூட்டுறவு விவசாயிகள் கடன் சங்கத்திலும் தில்லு முள்ளு ஆளும் கட்சியினர் செய்ய அதிகாரிகள் அதற்கு துணை புரிந்தனர். திமுக, பாமக போன்ற கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த அலுவலகத்தில் போராட்டம் செய்ய தற்போது தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக ஏப்ரல் 4ந்தேதி அதிகாரிகள் வேறு வழியில்லாமல் அறிவித்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை ஒன்றியம், நல்லவன்பாளையம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 11 இயக்குநர்கள். அதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 11 பேர் மனு செய்துள்ளனர். அந்த 11 பேர் மட்டும்மே தேர்தலில் நிற்பதால் தேர்தல் இல்லாமல் அப்படியே வெற்றி பெற்றதாக அறிவிக்கும் நிலையேவுள்ளது. அதிகாரபூர்வமான நிலையில் கடந்த 2ந்தேதி இரவு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியல் கணக்குப்படி 8 பேர் அதிமுகவினர், 3 பேர் திமுகவினர்.

இதற்கிடையே 3 நாள் பொருத்து அந்த பட்டியலை ஆளும்கட்சிக்கு சாதகமாக மாற்ற முடிவு செய்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாக நல்லவன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட 10 கிராமங்களில் உள்ள திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டியல் வெளியாகி 3 நாள் ஆகிறது. அதன்பின் இப்போது ரகசியமாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் ஆதரவுடன் பட்டியலை மாற்றி இயக்குநர்கள் 11 பேரும் அதிமுகவினராக இருப்பது போல் மாற்றவுள்ளார்கள் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இதுப்பற்றி நாங்கள் எங்கள் மா.செ வேலுவிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார் திமுக பிரமுகர் ஒருவர்.

வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு 3 நாட்களுக்கு பின் ஆளும்கட்சிக்கு சாதகமாக பட்டியல் மாற்றப்படுகிறதா என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரேணுகாம்பாளின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த எண்ணில் பேசிய அலுவலக கண்காணிப்பாளர், மேடம் பிஸி என்றவர் மாற்றும் திட்டம் எதுவும்மில்லை என்றார் நம்மிடம்.

சார்ந்த செய்திகள்