முதல்வர் மு.க. ஸ்டாலினின் தந்தையும் மறைந்த முதல்வருமான கலைஞரின் நினைவாக அவர் திரைப்பட வசனம் எழுதிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் முன்பு முதல்வர் செல்ஃபி எடுத்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. டிவிட்டர் வலைத்தளத்தில் செல்ஃபியை பகிர்ந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ்க்குமான நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய டிவிட்டர் பதிவு: “சேலம் கள ஆய்வின்போது... வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். டி.ஆர். சுந்தரம் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில்; முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன். 9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து, அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில் பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்.'' என்று பதிவு செய்துள்ளார்.