கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் கடந்த சனிக்கிழமை அன்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உன்னையே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு அமலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா விருந்தினர்கள், கட்சிக்காரர்கள் என தன்னை பார்க்கவரும் அனைவரும் பொன்னாடை, சால்வைகள், பூங்கொத்து உள்ளிட்டவை எதுவும் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசளித்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அளிக்கப்படும் ஜீரோ டிராஃபிக் சலுகைகளை திரும்பப்பெறுமாறு போக்குவரத்து போலீசாருக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ஜீரோ ட்ராஃபிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சாலைகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.