அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் படிப்படியாக அகற்றப்பட்டு வரும் நிலையில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் மழை பாதித்த இடங்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு கொட்டப்பட்டதாக புகார் எழுந்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் பகுதி நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்காக ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. நோய்த் தொற்றை தவிர்க்கும் வகையில் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்ட நிலையில் வைத்தீஸ்வரன் தெரு, ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக தூய்மைப் பணியாளர்கள் மைதா மாவை போட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சர்ச்சை பெரிதான நிலையில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், 'தூய்மை பணிகளுக்காக தூவப்படும் பிளீச்சிங் பவுடரில் சுண்ணாம்பு கலந்து மூட்டைகளை கட்டும் பொழுது தவறுதலாக மாறி இருக்கலாம். அதில் மைதா மாவு கலக்கப்படவில்லை' என விளக்கம் அளித்துள்ளார்.