
அமுதா ஐஏஎஸ் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சிறப்பாக கவனித்துக்கொள்வார் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று (14.12.2021) தொடங்கிவைத்தார். விழாவில் பேசிய அவர், மகளிர் மேம்பாட்டுக்கு இந்த அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "தமிழகம் முழுவதும் 58,463 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,76,142 பேருக்குப் பலகோடி ரூபாய் கடனுதவி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. மகளிர் நலனுக்காக இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து செய்துவருகிறது. எனவே மகளிர் இவ்வாறான திட்டங்களின் வழியாக புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டும். இந்த மகளிர் சுயஉதவிக்குழு முன்னேற்றத்திற்குப் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்திருந்தவர் அமுதா ஐஏஎஸ். தற்போது இந்தத் திட்டத்துக்கு அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னும் சிறப்பாக பணி செய்வார்" என்றார்.