நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூபாய் 14.44 கோடி மதிப்பிலான 26 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூபாய் 137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, நாமக்கல்லில் நடைபெற்று வரும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு முதல்வர் செய்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "கரோனா தடுப்பில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. காய்ச்சல் முகாம் நடத்தியதன் விளைவாக, கரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 68 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்திலிருந்து பலர் வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் கரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. கரோனா பரிசோதனை செய்து விட்டு, கரோனா இல்லை என்றால் அரசு விழாவுக்கு யாரும் வரலாம்; யாரையும் தடுக்கவில்லை. ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க கோருவது அமைச்சர் உதயகுமார் கருத்து; அரசின் கருத்தல்ல. பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரே காட்டமான பதில் அளித்துவிட்டார். இ-பாஸ் முறையால் தான் கரோனா யாருக்கு எல்லாம் இருக்கிறது என கண்டறிய முடிகிறது” இவ்வாறு முதல்வர் கூறினார்.