காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., அமெரிக்கா சென்ற போது அமெரிக்கா வாழ் இந்தியர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடினார். அப்போது அவர், “இந்தியா, அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நியாயமான இடமாக இருக்கும்போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும். ஆனால், இந்தியா ஒரு நியாயமான இடம் அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வணிகத் தலைவரின் பட்டியலைப் பார்க்க வேண்டும். அதில், பட்டியலினத்தவர்களைச் சேர்ந்தவர்களையோ, பிற்படுத்தப்பட்டவர்களின் பெயர்களையோ காட்டுங்கள். முதல் 200 பேரில், ஒரு பிற்படுத்தடுத்தப்பட்டவர் இருப்பதாக நினைக்கிறேன். 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘ ராகுல் காந்தி வெளிநாட்டில் இருக்கும் போது, இந்தியாவில் இட ஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாகக் கூறினார். இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஒருபுறம், மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் நாட்டில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் எனக் கூறுகிறார். இட ஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலையை இது காட்டுகிறது. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன்” பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் பாஜக நிர்வாகி தர்விந்தர் சிங் மார்வா, ‘ராகுல் காந்தி தனது நடவடிக்கையை மாற்றாவிடில் இந்திரா காந்திக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்’ என மிரட்டி இருந்தார். இதனையடுத்து ராகுல் காந்திக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு தர்விந்தர் சிங் மார்வா மீது நடவடிக்கை எடுக்க் கோரி தேர்தல் ஆணையத்திற்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக தலைவர் ஒருவர், ‘ராகுல் காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதியைச் சந்திக்க நேரிடும்’ மற்றும் ‘நாக்கை அறுப்பதாக ஷிண்டே சேனா எம்.எல்.ஏ. பேசியது’ தொடர்பாக ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சகோதரர் ராகுல் காந்தியின் புகழும், மக்கள் ஆதரவும் பெருகிவருவது இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். மேலும் இது போன்ற மிரட்டல் மற்றும் வன்முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.