Skip to main content

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

cm mk stalin write letter to pm for fisherman issue 

 

இலங்கை கடற்படையினர் கைது செய்த 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 16 மீனவர்களும் நெடுந்தீவு அருகே 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் இரண்டு படகுகளையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், மீனவர்களை காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று தங்க வைத்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12ந் தேதி அன்று  இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர் என்பதை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையை சேர்ந்த சிலராலும் இலங்கை கடற்படையினராலும் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்துக்குள் நடந்த 3-வது சம்பவம் ஆகும். மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன. எனது முந்தைய கடிதங்களில் இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.

 

வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நீங்கள் உடனடியாக இதில் தலையிட வேண்டும். எனவே, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடி படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்