Skip to main content

வாடிய கடலூர் மக்கள்; நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

CM MK Stalin visit cuddalore district and gave relief fund

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் அடைமழை கொட்டித் தீர்த்தது. இதில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், விளைநிலங்களை மூழ்கடித்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் இம்மாதம் 13ம் தேதி வரை பெய்த மழையில் அதிகபட்சமாக கடந்த 12ம் தேதி 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் 6000 ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், 208 கிராமங்களைச் சேர்ந்த 4655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இதுபோன்று காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் 12 கிராமங்களில் 123 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், 190 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 271 வீடுகள் இரு மாத மழையிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 63 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12ம் தேதி பெய்த அடைமழையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆடு, மாடு என 108 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

 

இரண்டு மாதங்களில் மழையின் பாதிப்பு காரணமாக 97 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 43 கிலோமீட்டர் அளவிற்கு நெடுஞ்சாலைத்துறை சாலைகள் சேதமடைந்துள்ளன. மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 62 இடங்களில் மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று கிராமப் பகுதிகளில் 231 பஞ்சாயத்துகளில் குடியிருப்புப் பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.

 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிட்டார். கடலூர் மாவட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டங்களில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் இடிந்த வீடுகளுக்கு அதன் தன்மைக்கு ஏற்றாற்போல் ரூபாய் 5200 வரை நிதி உதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து வல்லம்படுகையில் ஜெயங்கொண்டபட்டினம், பேராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.  

 

அப்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்