தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. அதாவது 45 வயதுக்கு மேற்பட்ட உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகளை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான ஃபைல்களை வழங்குதல், அவசியமான மருத்துவ சேவைக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு உலக அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாகத் திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாடும் பணிக்குழு (United Nation Interagency Task Force Award) விருது.
சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, கண்காணித்து, மேம்படுத்தி வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.