தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அதோடு கனமழை காரணமாக வைகை ஆற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடியது.
மதுரையில் உள்ள பல்வேறு கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளதால் குறிஞ்சி நகர், சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்க இடமில்லாமல் மக்கள் தவித்து வந்தனர். அதே சமயம் முல்லை நகரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சு. வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் (25.10.2024) மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவைத் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கனமழையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் களத்திற்குச் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்திக்கும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.10.2024) நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் மதுரை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கவேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டடுள்ள்ளார். இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.