Skip to main content

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
CM MK Stalin funding announcement for virudhunagar dt sathur near factory incident

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்தில் ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (19.09.2024) காலை சுமார் 09.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் அப்பையநாயக்கன்பட்டி கிராமம், ஆகாஷ் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் நூறு சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி (வயது 19) என்பவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

CM MK Stalin funding announcement for virudhunagar dt sathur near factory incident

அதோடு இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், நூறு சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்திக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்