சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியினருடன் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுகவின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியான பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் முதல்வர் அறிமுகம் செய்துவைத்தார்.
அப்போது பேசிய முதல்வர், "வாக்குகளைச் சிந்தாமல், சிதறாமல் இரட்டை இலை சின்னத்தில் பதிவாவதை நிர்வாகிகள் உறுதிசெய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "வேட்பாளர் பட்டியல் தொடர்பான அதிருப்தி என்பது எல்லாக் கட்சிகளிலும் உள்ளதுதான். கூட்டணியில் ஒரே தொகுதியை எல்லாக் கட்சிகளும் கேட்கும்போது பேசித்தான் தீர்க்க வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியதால் பாதிப்பு இல்லை. கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் பழி சுமத்துவது தவறு. தே.மு.தி.க.வுக்கு அரசியல் பக்குவம் இல்லை. மக்களுக்கு தேவையானதை தேர்தல் அறிவிப்பு முன்னரே நடைமுறைப்படுத்திய கட்சி அ.தி.மு.க. புதுச்சேரியில் பா.ஜ.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மக்கள் கொடுக்கும் தீர்ப்புதான் இறுதியான தீர்ப்பு; மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று சொல்வார்கள். மக்கள்தான் நீதிபதி. அவர்கள் இந்த தேர்தலிலேயே சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.