தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போது தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதோடு தனது சொந்த பந்தங்களோடும் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி சில நிகழ்ச்சிகளுக்காக கலந்து கொள்வதற்கு கடந்த சனிக்கிழமை மாலை தனது சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் கோவை வந்த எடப்பாடி பழனிச்சாமி பிறகு கார் மூலம் சேலம் சென்றார். அப்போது ஈரோடு மாவட்டத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாவட்ட அமைச்சர் கே சி கருப்பணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு சேலம் சென்ற முதல்வர் எடப்பாடி சில நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு இரவில் சொந்த கிராமமான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் தோட்டத்திற்கு சென்றார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சில நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு சேலத்தில் தங்கியிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வந்தாலே அவரது குடும்பம் உற்றார் உறவுகளோடு மகிழ்ச்சியை பரிமாறுவது வழக்கம். அதன்படி இரண்டு நாளும் உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருந்தார்.
வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தலைவாசலில் ரூ.1,022 கோடி மதிப்பில் சுமார் 1,100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படுகிறது. கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் புதிய குடிநீர் திட்டப்பணி களுக்கான கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.