விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள மயிலம் பகுதியில் இருக்கும் மலையின் மீது பிரபலமான முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது உண்டு. இந்த முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எட்டியான் என்பவரது மகன் பார்த்திபன்(20), தனது நண்பர்களுடன் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அதேபோல் திண்டிவனம் டி.வி. நகரைச் சேர்ந்த சசிகுமார் என்பவரது மகன் ஆகாஷ்(19) என்பவர் தனது நண்பர்களுடன் சாமி தரிசனம் செய்ய கீழே இருந்து மலைக்கு ஏறிக் கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலின் காரணமாக பார்த்திபனும் ஆகாஷும் ஒருவருக்கு ஒருவர் இடித்துக் கொண்டுள்ளனர். அதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, பின் கைகலப்பாகியுள்ளது. அதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.
இதில் ஆகாஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வலி தாங்க முடியாத அவர், அருகில் இருந்த கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து பார்த்திபனை வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால், அங்கு கோயிலுக்கு வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இதையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த பார்த்திபனை அவரது நண்பர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
ஆகாஷுடன் கூட வந்த அவரது நண்பர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், நடக்க முடியாத நிலையில் ஆகாஷ் அங்கேயே விழுந்து கிடந்துள்ளார். இந்த மோதல் குறித்து தகவலறிந்த மயிலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மயக்க நிலையில் இருந்த ஆகாஷைமீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இருத்தரப்பினரையும் சேர்த்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மைலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.